×

மூலப்பொருட்களின் விலை உயர்வால் 14 ஆண்டுக்கு பிறகு தீப்பெட்டி விலை ரூ2 ஆக அதிகரிப்பு

கோவில்பட்டி: தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் தீப்பெட்டி விலை ரூ2 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

தீப்பெட்டி தொழிலில் நேரிடையாகவும், மறைமுகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவற்றில் 90 சதவீதம் பேர் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளேரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இவை தவிர பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

 மேலும் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 1ம்தேதி முதல் ஒரு தீப்பெட்டி 2 ரூபாய்க்கு விற்பனை செய்ய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தற்போது ஒரு தீப்பெட்டி ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1995ம் ஆண்டு 50 காசுகளாக இருந்த தீப்பெட்டி விலை 2007ல் 1 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது  2 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Increase in match price to Rs 2 after 14 years due to increase in raw material prices
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை