×

சுவாதி கொலை வழக்கை தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரின் சிறை மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016ல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இதில் தென்காசி மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த மாதம் 23ல் நடந்த விசாரணையின்போது, ராம்குமாரை பரிசோதித்த சிறைத்துறை மருத்துவர் நவீன் குமார், பிரேத பரிசோதனை மருத்துவர் பாலசுப்பிரமணியம், அப்போதைய சிறை கண்காணிப்பாளர் ஆர்.அன்பழகன், சிறை காவலர் ஜெயராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அடுத்தகட்ட விசாரணையை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில், மனித உரிமை ஆணைய விசாரணையை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சிறை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆர்.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், கைது செய்யப்பட்ட ராம்குமார் உயர் பாதுகாப்பு பிரிவு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தவர் அங்குள்ள மின்சார சுவிட்ச் பாக்சை உடைத்து ஒயரை கடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது.  பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராம்குமாரின் உடல்  எய்ம்ஸ்  மருத்துவர் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மின்சாரம் பாய்ந்துதான் ராம்குமார் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டும் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளார். ராம்குமார் மரணம் நடந்து ஒரு வருடத்திற்குள் மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விசாரிக்க முடியாது. ஏற்கனவே இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கை முடித்து வைத்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. ராம்குமார் தந்தையின்  தரப்பிலும் தவறான கருத்துகள் ஊடகங்களில் பரப்பப்படுகிறது. எனவே, மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு குறித்து மனித உரிமை ஆணைய பதிவாளர், ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஆகியோர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : State Human Rights Commission , Interim injunction to voluntarily inquire into Swati murder case by State Human Rights Commission: High Court order
× RELATED போலீசாரால் தாக்கப்பட்டு...