கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

திருவள்ளுர்: திருவள்ளுர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், தரைபாலத்தை கடந்து, கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழையால் ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர், பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் பெய்த தொடர் கனமழையாலும், ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் இருந்து வெளியேறும் உபரிநீரால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த எல்லப்பன் நாயுடுபேட்டை மற்றும் காந்தி கிராமம் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள தரைபாலத்தை மூழ்கடித்து உபரிநீர் செல்கிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக அப்பகுதிகளில் இருந்து திருவள்ளூர் மற்றும் கனகம்மாசத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று, வர முடியாமல்  தவிக்கின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வெளியில் சென்று, வர முடியாமலும், கூலி வேலைக்கு செல்ல முடியாமலும், உடல் நலம் பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமலும், ஆம்புலன்ஸ் வாகனமும் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால் உணவுக்கு வழி இல்லாமலும், வாழ்வாதாரம் இழந்தும் தவிப்பதாக அப்குதி மக்கள் கூறுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: