முதியவரிடம் 9 சவரன் பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி, திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (58). கட்டிடமேஸ்திரி. எப்போதும் இவர், கழுத்தில் தங்க செயின், விரல்களில் மோதிரங்கள் மாட்டி கொண்டு சுற்றிவருவார். நேற்று மதியம் கண்ணன், ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே ஒரு டீக்கடையில் நின்றிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள், நாங்கள் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் மகன் என அறிமுகம் செய்தனர். மேலும் தன்னிடம் ஒரு வைரம்  இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கண்ணனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

பின்னர் நைசாக பேச்சு கொடுத்தபடி, அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தெருவில் சென்றபோது, திடீரென கண்ணன் சுயநினைவை இழந்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, 4 மோதிரங்களை கழற்றி கொண்டு, 3 பேரும் தப்பி விட்டனர். சுயநினைவை இழந்த கண்ணன், பஸ் நிலையம் ஓரமாக நடந்து சென்றார். இதை பார்த்ததும் சிலர், அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவருக்கு நினைவு திரும்பியது. அப்போது அவர் அணிந்திருந்த நகைகளை 3 பேர் பறித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.   

Related Stories: