மாவட்ட அளவில் கருங்குழி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முதலிடம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் சுமார் 14,000  பேர் வசிக்கின்றனர். இங்கு, திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல், தனிநபர் மற்றும் பொது கழிப்பறைகள் கட்டமைப்பது ஆகிய பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இதனால் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் மாவட்ட அளவில் கருங்குழி பேரூராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதையொட்டி, மத்திய குழு ஒன்றிய மற்றும் தமிழக அளவில் தரவரிசை மேற்கொள்கிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 468 பேரூராட்சிகளில் கருங்குழி பேரூராட்சி 7வது இடத்திலும், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் 17 பேரூராட்சிகளில் முதல் இடத்திலும் உள்ளது. மத்திய தர மதிப்பீட்டு குழு 3 மாதத்துக்கு ஒருமுறை, பேரூராட்சிகளில் உள்ள பொது மக்களிடம் கருத்து கேட்டு, நேரடி களஆய்வு நடத்தி அதன் ஆதாரங்களின்படி இந்த தர மதிப்பீடு வழங்குகிறது.

இதனால்,  இந்த பேரூராட்சிக்கு மேலும் பல அரசு திட்டப்பணிகள் கிடைக்க வாய்ப்புகள் உறுதியாகியுள்ளது. மேலும்,  கருங்குழி பேரூராட்சி, கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்களிடம் 100 சதவீத வரி வசூல் செய்து, ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் கூறுகையில், தமிழக அளவில் 7வது இடத்தையும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அளவில் முதலிடத்தையும் இந்த பேரூராட்சி பெறுவதற்கு  நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு தந்த இப்பகுதி மக்களே காரணம் என்றார்.

Related Stories: