×

மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தேர்தலில் பாஜ.வை எளிதாக வெல்லலாம்: மம்தா அழைப்பு

புதுடெல்லி: ‘மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்தால், பாஜ.வை எளிதாக தோற்கடிக்கலாம்,’ என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தேசிய தலைவராக உருவெடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கோ, கோரிக்கைகளுக்கோ திரிணாமுல் எம்பி.க்கள் தற்போது ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. கடந்த வாரம் டெல்லி சென்ற மம்தா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுவதையும் அவர் தவிர்த்தார். அதோடு, மேகாலயாவை சேர்ந்த 12 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களையும் தனது கட்சியில் சேர்த்தார்.

மேலும், பல காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைத்து விடுத்துள்ளார். இதன் மூலம், பாஜ.வும், திரிணாமுல்லும் இணைந்து இருமுனை தாக்குதலை தொடுப்பது உறுதியா கி இருக்கிறது. இந்நிலையில்,  மகாராஷ்டிரா சென்றுள்ள மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.  முன்னதாக, மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர்களை சந்தித்தபோது பேசிய மம்தா, ‘‘மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், பாஜ.வை எளிதாக தோற்கடிக்கலாம்,’’ என்றார். இதன்மூலம், மாநில கட்சிகளை தனது தலைமையில் ஒருங்கிணைக்க, மம்தா அழைப்பு விடுத்துள்ளார் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தாக்கரே தவிர்த்தது ஏன்?
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்துதான், சிவசேனா ஆட்சி நடத்துகிறது. தற்போது, சோனியாவுக்கும் மம்தாவுக்கும் இணக்கமான நட்பு இல்லை. அரசியல் ரீதியாக மோதல் நிலவுகிறது. இதுபோன்ற நிலையில், மம்தாவை சந்தித்தால் சோனியாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதாலேயே, மம்தாவை சந்திப்பதை தாக்கரே தவிர்த்ததாக கருதப்படுகிறது.

2024ம் ஆண்டுக்கான திட்டம்
மம்தாவை சந்தித்தது பற்றி சரத்பவார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இருவரும்  பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்தோம். மக்களின் மேம்பாடு, ஜனநாயக மாண்பை பாதுகாப்பதற்கான முயற்சிகளை பலப்படுத்த உறுதி பூண்டோம். 2024ம் ஆண்டுக்கான திட்டம்...,’ என கூறியுள்ளார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலைதான், 2024க்கான திட்டம் என்று பவார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐமு கூட்டணியா? அப்படி என்றால்...?
பவாரை சந்தித்த பிறகு மம்தா பேட்டி அளித்தபோது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதை கேட்ட மம்தா, ‘அப்படி என்றால் என்ன? ஐமு கூட்டணி என்பதே இங்கு இல்லை,’ என்று பதிலளித்தார்.

Tags : Mamta , BJP can easily win elections if state parties unite: Mamata calls
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...