மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் 2வது நாளாக மாணவர்கள் போராட்டம் கோயம்பேடு கல்லூரி பேராசிரியர் கைது: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவிக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிய பேராசிரியர், மாணவர்களின் 2வது நாள் போராட்டத்தால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்ச்செல்வன் (40). இவர், ஆன்லைன் வகுப்பின்போது ஒரு மாணவியின் செல்போனுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்ததை கூறியுள்ளார்.

இதனால், கொந்தளித்த கல்லூரி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். பின்னர், உதவி ஆணையர் ரமேஷ் பாபு மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாணவிக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, கல்லூரியிலிருந்து பேராசிரியர் தமிழ்ச்செல்வனை உடனடியாக நிர்வாகம் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து கல்லூரியில் கமிட்டி அமைத்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை செய்த பிறகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், நேற்று காலை 10 மணி அளவில் வகுப்புகளை புறகணித்து கல்லூரி மாணவர்கள் ஆங்கில பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்ய கோரி 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு வந்தனர். மேலும், கல்லூரி மாணவர்கள் இடையே கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியபோது அதற்கு கல்லூரி மாணவர்கள் பேராசிரியரை கைது செய்யாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்றனர். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர். அதில் பேராசிரியர் ஆபாசமான எஸ்எம்எஸ் அனுப்புவதும், வாட்ஸ்அப் காலில் ஆபாசமாக பேசுவதும் போன்ற புகார்களை அடுக்கடுக்காக குறிப்பிட்டிருந்தனர்.  

கல்லூரி முதல்வர் கோயம்பேடு காவல் நிலையத்தில் அந்த புகாரை அளித்தார். அதன் அடிப்படையில், பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் பேராசிரியரின்  வீடு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின்படி, விரைந்து சென்ற போலீசார் பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். பின்னர், கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பல மாணவிகளுக்கும் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் எஸ்எம்எஸ் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: