தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்று கடந்த 2008ம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், 2011ம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் நாள் தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. அதை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாமக கடுமையாக எதிர்த்தது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அகற்றப்பட்ட நிலையில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய அரசுக்கு உள்ளது. தை பிறக்க இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுநரின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஜனவரி மாதம் கூடும் கூட்டத் தொடரில் புதிய சட்டத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலைப் பெற அவகாசம் இருக்காது. அதை கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: