12 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியால் முடங்கியது மாநிலங்களவை: மக்களவையில் காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு

புதுடெல்லி: அவை விதிமுறைகளை மீறியதாக 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நடந்த போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு நீதி கேட்டு காங்கிரஸ், திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த ஆகஸ்ட்டில் நடந்த மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்ட காங்கிரசை சேர்ந்த 6 எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் அவை விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவையிலிருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று காலை மாநிலங்களவை தொடங்கியதும், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அவை அடுத்தடுத்த பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், அணைகள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்து பேசத் தொடங்கினார்.

அப்போது, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டுமென அனுமதி கோரினார். ஆனால் அவையை தலைமை வகித்த புவனேஸ்வர் கலிதா அனுமதி மறுத்தார். இதனால், மசோதா குறித்து அமைச்சர் செகாவத்தை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவையை கலிதா நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதே போல, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, டெல்லி எல்லையில் போராட்ட களத்தில் விவசாயிகள் பலியான விவகாரத்தை அவையின் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ், திமுக கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என  கோஷமிட்டபடி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

எத்தனை விவசாயிகள் இறந்தார்கள் என்ற கணக்கில்லை

டெல்லி போராட்ட களத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில், ‘‘இதுதொடர்பாக வேளாண் அமைச்சகத்திடம் எந்த பதிவுகளும் அரசிடம் இல்லை. எனவே இழப்பீடு வழங்குவது குறித்த கேள்வி எழவில்லை’’ என்றார். இதற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த அவர், ‘‘விவசாயிகளை அவமதிக்கும் செயல் இது. போராட்டத்தில் இறந்த 700 விவசாயிகள் குறித்து கணக்கெடுக்க முடியாத அரசு எப்படி கொரோனாவால் இறந்த லட்சக்கணக்கான மக்களின் கணக்கெடுப்பை சரியாக எடுக்கும்? கொரோனாவால் கடந்த 2 ஆண்டில் 50 லட்சம் இறந்த நிலையில், வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே இறந்ததாக அரசு கணக்கு காட்டுகிறது’’ என்றார்.

காந்தி சிலை முன்பாக தினமும் போராட்டம்

12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை கண்டித்து நாடாளுமன்றத்தின் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று காலை போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா, டிஆர்எஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஆர்ஜேடி, ஐயுஎம்எல், தேசிய மாநாட்டு கட்சி, எல்ஜேடி, ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களில் ஒருவரான் ரிபுன் போரா அளித்த பேட்டியில், ‘‘சஸ்பெண்ட் நடவடிக்கை எதேச்சதிகாரமானது.

இதை எதிர்த்து நாள் தோறும் இரு அவைகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் காலை 10 மணி முதல் 11 மணி வரை காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களும், இந்த உத்தரவு ரத்து செய்யப்படும் வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் முழுவதும் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

ரூ.5 கோடி இழப்பீடு தரப்பட வேண்டும்

மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய பஞ்சாப் அனந்த்பூர் சாகிப் காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ‘‘டெல்லி போராட்ட களத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

Related Stories: