அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

சென்னை: அதிமுக கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக கட்சியின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த 4 மாதமாக புதிய அவைத்தலைவர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த பதவிக்கு கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் போட்டியிட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, அதிமுக கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். இதையடுத்து செயற்குழு உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன், தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.

தமிழ்மகன் உசேன் தற்போது, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்து வருகிறார். மாவட்ட அமைப்பாளர், வக்பு வாரிய தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்துக்கு தமிழ்மகன் உசேன் ஆட்டோவில் வந்தார். செயற்குழு கூட்டம் முடிந்ததும், வாடகை ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. அந்த கூட்டத்தில் முறைப்படி, தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Related Stories:

More