புதிய வாக்காளர் சேர்க்கும் பணியை டிச.15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: புதிய வாக்காளர் சேர்க்கும் பணியை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதம்: கடந்த மாதம் நடந்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை சுருக்குமுறை திருத்தத்தின் மூலம் இறுதி செய்வது குறித்த கால அட்டவணை உறுதி செய்யப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழகத்தில் நவம்பர் மாதம் முழுவதும் கன மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியை போன்று இந்த ஆண்டு இந்த பணி முழுமையாக நிறைவேறவில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் 30.11.2021 உடன் வாக்காளர் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பு கோருபவர்கள் 2022 ஜனவரி 5ம் தேதிக்கு பின்னர் தான் அதை செய்ய முடியும் என்ற நிலைமை உள்ளது. எனவே, நவம்பர் 30ம் தேதி வரை அறிவித்துள்ள புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியின் கால அவகாசத்தை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து,  இளந்தலைமுறையினர் வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

More