ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்த சட்டத்தில் திருத்தம் பொதுச்செயலாளர் பதவி கைப்பற்றும் எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அதிமுக செயற்குழுவில் அதிரடி திருப்பம்

 ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்த சட்டத்தில் திருத்தம் பொதுச்செயலாளர் பதவி கைப்பற்றும் எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அதிமுக செயற்குழுவில் அதிரடி திருப்பம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நேற்று நடந்த அதிமுக செயற்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கனவு தகர்ந்தது. தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கடும் போட்டி எழுந்தது.

இதில் கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் அதிகளவில் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கும் இருவருக்கும் இடையேயோன மோதல் போக்கே காரணம் என்றும், எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளாததே இந்த தோல்விக்கு காரணம் என்றும் கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிவிட்டு, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வந்தார். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வரும்போது, ‘‘வருங்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க” என்று தனது ஆதரவாளர்கள் மூலம் கோஷம் எழுப்பப்பட்டு வந்தது. கட்சிக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தவர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், கட்சி எடப்பாடி பக்கம் சென்றுவிடாமல் இருக்க அவ்வப்போது சில பிரச்னைகளை பூதாகரமாக வெடிக்கச் செய்து அமைதியாக காய் நகர்த்தி வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, சி.வி.சண்முகம், வைத்திலிங்கம் ஆகியோருக்கு இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சி.வி.சண்முகத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்தார்.

 இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் தான் அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ம்தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காலை 10.35 மணிக்கு கட்சி அலுவலகத்தின் முதல் மாடியில் நடைபெற்ற செயற்குழுவுக்கு ஓபிஎஸ்- இபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வந்தனர். இதையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட சுமார் 250 பேர் பங்கேற்றனர்.

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த கூட்டம் மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் இரங்கல் தீர்மானம், சிறப்பு தீர்மானம் என 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய தீர்மானமாக,  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை  ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை  வாக்கின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், கட்சியை கைப்பற்றுவதுடன், அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கனவு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தகர்ந்தது.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: எம்.ஜி.ஆர். தமிழ் சமூகத்திற்கான மக்களின் பேரியக்கமாக, அதிமுகவை வழங்கியதன் 50வது ஆண்டு விழாவை, மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும். நாடெங்கும், நகரமெங்கும், சிற்றூரெங்கும் சீரும், சிறப்புமாக பொன்விழா கொண்டாட்டங்களை நடத்தி, அதிமுக கொடியேற்றி,கட்சி அலுவலகங்களை சீர்பெறச் செய்து, கட்சிக்கு உழைத்தோரை கவுரவப்படுத்தி, கொண்டாடி மகிழ செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நேரடி மற்றும் மறைமுக தேர்தல்கள் உச்சநீதிமன்ற ஆணையின்படி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் விழிப்புடன் இருந்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். மழை, வெள்ள நிவாரண பணிகளில் அதிமுகவினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும். சிறப்புத் தீர்மானம்: ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு மட்டுமே உரியது. அவரது மறைவுக்கு பின், அதிமுகவை வழிநடத்த 12.09.2017ம் நாள் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு, பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

மேலும், கழக சட்ட திட்ட விதியை திருத்தம் செய்ய, கழக பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, கழக சட்ட திட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில், விதி-20 மற்றும் விதி-43ல் திருத்தப்பட்டது. இது தொடர்பாக, அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, அதிமுக செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பிறகு, கழக சட்ட திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டது: அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்று கழக சட்ட திட்ட விதி 20(அ) பிரிவு -2 திருத்தி அமைக்கப்படுகிறது.

இந்த விதியை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல. விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை. மேலும், இந்த திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், இன்றைக்கு பிறகு கூட்டப்படும் அதிமுக பொதுக்குழுவின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதென்றும் இந்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் கட்சியின் பொதுச்செயலாளராகலாம் என்று கனவு கண்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் கனவு தகர்ந்துள்ளது. இருவரும் கட்சியினரால் தேர்வு செய்யப்பட இருப்பதால், ஒற்றைப்பதவி என்ற கோரிக்கைக்கு நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மற்றும் அதிமுக கட்சியினர், மனிதநேய பண்பாளர்கள், கலைஉலக பிரமுகர்கள் என 354 பேர் மறைவுக்கு செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

* இரவோடு இரவாக நீக்கம் ஏன்?

அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் அன்வர்ராஜா பங்கேற்றால் கட்சிக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்து அது ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும் என்று கட்சி தலைமை பயப்பட்டதாலேயே அன்வர் ராஜா நேற்று முன்தினம் இரவோடு இரவாக நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அன்வர் ராஜா அதிமுகவின் சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் பதவி வகித்தார். இதனால், சிறுபான்மையினருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்மகன் உசேன் அதிமுக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இரும்பு மனிதரான இபிஎஸ்

இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வந்த பின்பு ஓபிஎஸ்-இபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரும் போது இருவரின் ஆதரவாளர்களும் அவர்களை கோஷமிட்டு வரவேற்பது வாடிக்கையாக உள்ளது. அவர்கள் எழுப்பும் கோஷங்களே அங்கு மோதலை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று காலை 10.05 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.

அப்போது அவரது ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் புகழ் ஓங்குக என்று கோஷமிட்டனர். 10.15 மணிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்கும் விதமாக, ‘இரும்பு மனிதர் எடப்பாடி வாழ்க’ என்று தொடர்ந்து கோஷமிட்டனர். இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

* ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி

அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாகவே எடப்பாடி பழனிசாமி கைதான் ஓங்கி உள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் சொல்வதை தான் கட்சியினர் கேட்கும் நிலை உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குரல் கொடுத்தால் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட அன்வர் ராஜா, ‘சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி நான் தான் எம்ஜிஆர் என்று சொல்லியிருப்பார்’ என்று வெளியில் சொன்ன கருத்து பற்றி நடைபெற்ற விவாதத்தில் தான் மோதல் ஏற்பட்டது. அவர் முழுக்க முழுக்க ஓபிஎஸ் ஆதரவாளராகவே செயல்பட்டு வந்தார். ஆனால், அவர் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கான கடிதத்தில் ஓபிஎஸ்சும் கையெழுத்து போட்டுள்ளார். இதுபோன்று தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்படுவதற்கு ஓபிஎஸ்சே கையெழுத்து போட்டு வருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: