3 வேளாண் சட்டங்கள் ரத்து ஜனாதிபதி கோவிந்த் ஒப்புதல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். ஒன்றிய அரசு கடந்தாண்டு செப்டம்பரில் 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உபி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வந்தனர். ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் தோமர், பியூஷ் கோயல் தலைமையில் விவசாயிகளுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. ஆனால், விவசாயிகள் தங்களின் போராட்டத்தை ஒரு வருட காலமாக தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி அறிவித்தார். இதன்படி, கடந்த மாதம் 29ம் தேதி துவங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை அறிமுகம் செய்தார். அது, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இது குறித்த அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த சட்டம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், சர்ச்சைக்குரிய 3 புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories: