தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர்நிலை, பண்ருட்டியில் உள்ள செட்டிப்பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் வடவம்பாலம் பாசன கால்வாய், மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி, கீழ்மருவத்தூர் ஏரி, கடலூரில் வி.மாத்தூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம், சோத்துப்பாக்கம் ராஜா உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த தனித்தனி வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், தண்ணீர் மிகவும் அவசியமானது. தற்போது மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்ததுதான் காரணம். அதுமட்டுமல்ல, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு கண்காணிப்போம் என்று தெரிவித்தனர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், சிறப்பு அரசு பிளீடர் அனிதா ஆகியோர் ஆஜராகி, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் அரசு தெரிவித்திருப்பதாவது: ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது. சித்தாலப்பாக்கம் ஏரியை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நீர்நிலைகளின் எல்லைகள் குறித்து சென்னை முழுவதும், ஜிபிஎஸ் கருவி மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் அளவில், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, நலச்சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என குழு அமைத்து மாதம்தோறும் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தும் முன்னோடி திட்டத்தை சிட்லப்பாக்கம் ஏரியில் முதல்கட்டமாக அமல்படுத்த உள்ளோம். நீர் நிலைகளை மீட்டு அதை பாதுகாப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படும்.

நீர்நிலைகளில் ஆக்கிரமித்து குடியிருந்தவர்களுக்கு மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கடந்த மாதம் தலைமை செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தரப்பட மாட்டது. சம்பந்தப்பட்ட நிலத்தை பதிவு செய்வதற்கு முன்னால் பதிவுத் துறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடுவெடுக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டப்படாது. முக்கியமான நீர்நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லை கற்கள் நடப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9802 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு புனரமைக்கப்படும். இதில் 147 நீர்நிலைகள் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள இடங்களில் வீட்டு வரி விதிக்கப்பட மாட்டாது. அந்த வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது.

தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்துவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் சோமயாஜி, வக்கீல் எம்.ஜோதிகுமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்கள் வாதிடும்போது, தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல், நீர்நிலைகளிலேயே குப்பை கொட்டும் மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசும் ஆக்கிரமித்துள்ளது என்றனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றி முழுமையான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும். ஏற்கனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் சமரசமோ, கருணையோ காட்டாது என்று கூறி விசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

More