×

ஆலங்குளம் யூனியனில் கணக்கில் வராத ரூ.88 ஆயிரம் பறிமுதல்: நெல்லை உள்ளாட்சி தணிக்கை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: வங்கி லாக்கர் குறித்தும் விசாரணை

நெல்லை: ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.88 ஆயிரம்  பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தணிக்கை துறை உதவி இயக்குநர் உள்பட  11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லையில் உள்ளாட்சி தணிக்கைத் துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி துறை மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி என மூன்று அடுக்குகளை உள்ளடக்கியது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்களை தலைவராக கொண்டு செயல்படும் மாவட்ட வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் இயங்குகின்றன. கிராம பஞ்சாயத்துகளில் ஊராட்சி செயலாளரை தவிர அரசு அதிகாரிகள் கிடையாது என்பதால் ஊராட்சி ஒன்றியத்தின் பிடிஓக்கள் (கிராம ஊராட்சி) கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

இந்த ஊராட்சி ஒன்றியங்களில் வரவு, செலவுகள், திட்டப் பணிகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதி தணிக்கை துறை என்ற தனித் துறை உள்ளது. பொதுவாக அந்த மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து ஒரு நாளில் ஏதாவது ஒரு இடத்தில் தணிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.   இதன்படி தென்காசி  மாவட்டம் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய 5  யூனியன்களின் உள்ளாட்சி கணக்கு தணிக்கை நேற்று முன்தினம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடந்தது. தென்காசி மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகம்மது லெப்பை,  தென்காசி தணிக்கைத் துறை அதிகாரி உமாசங்கர் ஆகியோர் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் பணம் அதிகளவில்  புழங்குவதாக நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து  நேற்று முன்தினம் மாலையில் நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மெக்கலரின் எஸ்கால்  தலைமையில் போலீஸ் குழுவினர், ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் திடீரென நுழைந்து அதிரடி  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பஞ்சாயத்து செயலர்கள், பிடிஓ  மற்றும் அரசு அலுவலர்களிடம் சோதனை நடந்தது. இதில் சில ஆவணங்களும், கணக்கில்  வராத ரூ.88ஆயிரத்து 680ம் கைப்பற்றப்பட்டது.  இதுதொடர்பாக  தணிக்கை குழு உதவி இயக்குநர்கள், தணிக்கை ஆய்வாளர்கள், பஞ்சாயத்து  செயலர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி எஸ்கால் தலைமையில் போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து இருப்பதாக கூறி இன்று காலையில் நெல்லை என்ஜிஓ பி காலனியில் உள்ள உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் முகமது லெப்பை வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது.

நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராபின்ஞானசிங் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் உள்ள ஆவணங்கள், பணம் மற்றும் சொத்துகள் குறித்து சோதனை நடத்தினர். மேலப்பாளையம் கனரா வங்கியில் அவருக்கு லாக்கரில் உள்ள பணம், நகை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. தணிக்கை என்ற பெயரில் அதிகளவில் பணத்தை சேர்த்து வைத்திருப்பது விஜிலென்ஸ் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Hallu Union ,Langsa ,Paddy ,Audit , Corruption Eradication, Test
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...