கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒரு மாதமாக வெளியே வர முடியாமல் தவிக்கும் 2 கிராம மக்கள், மாணவர்கள்: பிரச்னையை தீர்க்க கோரிக்கை

திருவள்ளுர்: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் இரண்டு கிராம மாணவ, மாணவிகள் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மபள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் மற்றும் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் பெய்த மழையாலும் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

திருவள்ளூர் அடுத்த எல்லப்பன் நாயுடுபேட்டை, காந்தி கிராமம் பகுதிகளில் உள்ள தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து உபரி நீர் பாய்ந்து செல்கிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக  அப்பகுதியில் இருந்து திருவள்ளூர், கனகம்மாசத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி    எல்லப்பன் நாயுடுபேட்டை, காந்தி கிராமத்தை சேர்ந்த பொது மக்களும் வேலை விஷயமாக செல்லமுடியாமல் ஒரு மாதமாக தவித்து வருகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமலும் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வந்து செல்ல முடியாத நிலைமையிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.‘’இந்த பிரச்னையை தீர்க்க மேம்பாலம் அமைக்கவேண்டும். தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும்’ என்று கிராம மக்கள் கூறினர்.

Related Stories: