அதிமுகவில் இருந்து நீக்கம்: ஆதரவாளர்களை திரட்டுகிறார் அன்வர்ராஜா?

சாயல்குடி: ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி அன்வர்ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் அதிமுக தலைமைக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன், அன்வர்ராஜா விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலம் முதல் மிக மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர்ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர் தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார். பரபரப்பு பேச்சுக்கு புகழ் பெற்றவர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்து வந்தார். பிறகு இருவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த அதிமுகவில் மூத்த தலைவராக இருந்து வருகிறார். இபிஎஸ், ஓபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். இதனால் இவரை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கட்சி தலைமை தடை விதித்தது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செய்தனர். ஆனால் அன்வர்ராஜா தனியாக வந்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது தவறில்லை’’ என்றார். மேலும் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் செல்போனில் பேசுகையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அன்வர்ராஜா தனது கருத்தினை பதிவு செய்யும்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அவரை அடிக்க பாய்ந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தனியார் டிவி.களில் சிறப்பு நேர்காணலில் அன்வர்ராஜா கலந்து கொண்டு பேட்டி அளித்தார். அதில் பெரும்பாலும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவும், எடப்பாடி தரப்பினரை சின்னம்மா (சசிகலா) காலில் விழுந்தவர்கள் என்றும் விமர்சித்தார். மேலும் சசிகலாவை சின்னம்மா என்றுதான் அழைப்பேன் என ஆணித்தரமாக பேசினார். பாஜவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டிருந்தால் கடந்த சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இது எடப்பாடி தரப்பிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். வெளியிட்ட கூட்டு அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அன்வர்ராஜா நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அன்வர்ராஜா பேசிய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் பலர், அன்வர்ராஜாவை தொடர்பு கொண்டு, தங்களது ஆதரவை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களை திரட்டி, சென்னையில் இன்னும் 2 நாட்களில் அன்வர்ராஜா, ஆலோசனை செய்ய உள்ளார் என்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவுக்கு பெரும் இழப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணமும் அதுதான். முதலில் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகளை அழைத்து சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்’’ என்றனர்.

Related Stories: