24 ஆண்டுகளுக்கு பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறப்பு..: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

திருப்பூர்: 24 ஆண்டுகளுக்கு பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை அமைந்துள்ளது.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ( பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுவதுடன், உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியப் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில் 58.00 அடியாக உயர்ந்த நிலையில் , அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,145 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பிஏபி 4 ம் மண்டலத்திற்கு பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், குடிநீர் என வினாடிக்கு 1010 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் திருமூர்த்திமலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக , அணை நிரம்பியதையடுத்து பாலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டு பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கும் , கேரளா மாநிலம் சித்தூர், ஒலவங்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும்  பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணை கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி நிரம்பியது. அதன் பிறகு 24 ஆண்டுகளாக நிரம்பவில்லை. கடந்த 5 ,26 , 28ம் தேதிகளில் நிரம்பிய நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் நீர்வரத்து குறைந்தததால் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

Related Stories: