சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின் விசாரிக்க அதிகாரமில்லை!: சிறையில் ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் இடைக்கால தடை..!!

சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் சிறையில் மரணமடைந்தது தொடர்பாக தமிழக மாநில மனித உரிமை ஆணையம் நடத்தும் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயம், மின்சார வயரை கடித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறையில் ராம்குமார் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், அவரது தந்தை பரமசிவம் அளித்த புகாரின் பேரில் மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், மனித உரிமை ஆணைய விசாரணைக்கு எதிராக சென்னை மத்திய சிறை அதிகாரியாக இருந்த  அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ராம்குமார் வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்த நிலையில், மாநில ஆணையம் விசாரிப்பதாக குற்றசாட்டியிருக்கிறார். இந்த சம்பவம் 2016ம் ஆண்டு நடைபெற்றது. ராம்குமார் மரணம் என்பதும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்று இருக்கிறது.

ஒருவழக்கில் அடுத்த ஒரு ஆண்டுக்குள் தான் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க முடியும். ஆனால் சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின் விசாரணை நடத்த உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ராம்குமார் மின்சார வயரை கடித்ததால் தான் மரணம் ஏற்பட்டிருக்கிறது என்று திருவள்ளூர் மாஜிஸ்திரேட் அறிக்கை அளித்திருக்கிறார். அதேபோல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களும் அறிக்கை அளித்துள்ள நிலையில் தற்போது நடைபெறும் விசாரணை என்பது சட்டவிரோதமானது என்றும் மாநில மனித உரிமை ஆணையம் நடத்தும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கல்யாண சுந்தரம், சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதால் இந்த வழக்கில் தடை விதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறையில் ராம்குமார் உயிரிழந்தது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து, இந்த வழக்கு குறித்து மனித உரிமை ஆணையத்தின் பதிவாளர் 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Related Stories:

More