சேமிப்பு கிடங்கில் மழைநீர் புகுந்ததால் நெல் மணிகள் மழையில் முளைத்தது: விவசாயிகள் கவலை

சீர்காழி: சீர்காழி அருகே சேமிப்பு கிடங்கில் மழைநீர் புகுந்ததால் மூட்டைகளில் நெல் மணிகள் முளைக்க துவங்கியது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு மணல்மேட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 4,750 மெ.டன் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து நெல் மூட்டைகள் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலம் அரவை பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மணல்மேடு நெல் சேமிப்பு கிடங்கில் திடீரென மழைநீர் புகுந்தது.

இதனால் அங்கு அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை தண்ணீர் சூழ்ந்தது. இதில் 1000டன் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்ததோடு மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைத்து நாற்றுகளாக மாறியதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். தகவல் அறிந்த முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன், நெல் குடோன் பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், புகழேந்தி ஆகியோருடன் நேற்று சேமிப்பு கிடங்குக்கு நேரில் சென்று மழையில் நனைந்த நெல் மூட்டைகளை ஆய்வு செய்தார்.

இதில் மீதமுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு எடுத்து செல்லவும், தண்ணீர் வடிந்தவுடன் சேமிப்புக் கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் வேறு இடத்திற்கு மாற்றவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சேமிப்பு கிடங்கை சுற்றி சூழ்ந்துள்ள மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

Related Stories:

More