ஆம்பூர் அருகே மலட்டாற்று தரைப்பாலத்தில் 80 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய 2 பஸ்கள்: கயிறு கட்டி டிராக்டர் உதவியுடன் மீட்டனர்

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே மலட்டாற்றில் சிக்கிய 2 தனியார் பஸ்கள் டிராக்டர் உதவியுடன் மீட்கப்பட்டது. இதில் பயணித்த 80 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்ல நரியம்பட்டு, மேல்பட்டி வழியாக ஒரு சாலையும், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாறு தரைப்பாலம், மாதனூர் பாலாற்று தரைப்பாலம் ஆகியவை வழியாக செல்லும் சாலைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தொடர் மழை காரணமாக நரியம்பட்டு மலட்டாற்றில் உள்ள தரைப்பாலம், பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலம் ஆகியவை வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாதனூர் தரைப்பாலம் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அப்பகுதியில் அடியோடு போக்குவரத்து நின்றது. இதனால், குடியாத்தம் செல்லும் வாகனங்கள் பேரணாம்பட்டு அல்லது பள்ளிகொண்டா வழியாக சுமார் 30 கி.மீ தூரம் சுற்றி குடியாத்தம் செல்லும் நிலை ஏற்பட்டது.  

இந்நிலையில், மலட்டாற்றில் வெள்ளம் குறைந்த நிலையில் நேற்று காலை ஆம்பூர், குடியாத்தம் ஆகிய இரு மார்க்கத்தில் நரியம்பட்டு மலட்டாற்று வழியாக தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் குடியாத்தத்தில் இருந்து வந்த ஒரு தனியார் பஸ் மலட்டாற்றில் திடீரென அதிகரித்த வெள்ளத்தில் சிக்கி தரைப்பாலத்தின் நடுவே நின்றது. இதனால் பஸ்சில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சமடைந்தனர். உடனே பலர் ஆற்றில் இறங்கி வெள்ளத்தில் நடந்து சென்று தரைப்பாலத்தை கடந்தனர். இதை கண்ட அங்கிருந்த மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோர் உடனடியாக அங்கு டிராக்டரை கொண்டு வந்தனர்.

பஸ்சை டிராக்டரில் கட்டி இழுத்து மலட்டாற்று வெள்ளத்தில் இருந்து மீட்டனர். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  இதேபோல் ஆம்பூரில் இருந்து வந்த ஒரு தனியார் பஸ்சும் மலட்டாற்று வெள்ளத்தில் சுமார் 40 பயணிகளுடன் சிக்கியது. அந்த பஸ்சும் டிராக்டரில் கட்டி இழுத்து ஆற்றில் இருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், இரு பஸ்களில் பயணித்த சுமார் 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மலட்டாற்றில் வெள்ளம் குறையும் வரை வாகனங்களை இயக்க தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: