மேற்கு மண்டலத்தில் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்.: தொடரும் பாலியல் சீண்டல்களால் பரிதவிக்கும் பெண் குழந்தைகள்

* விழிப்பிருந்தும் பலனில்லை ˜* சமூக ஆர்வலர்கள்  வேதனை

சேலம்: மனதில் எந்த குழப்பமும், அச்சமும் இன்றி, எதார்த்தமாக துள்ளி திரிந்து விளையாடும் பருவம் குழந்தைப் பருவம். ஆனால், அந்த குழந்தை பருவத்தில் ஆண், பெண் என இருபால் குழந்தைகளையும் ஒருவித அச்ச உணர்விற்கு சமூகம் தள்ளியிருக்கிறதோ? என எண்ணத் தோன்றும் அளவிற்கு நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகளவு நடக்கிறது. இதனை தடுக்க பெற்றோர் மற்றும் பள்ளி குழந்தைகளிடையே தொடர் விழிப்புணர்வை அரசு முன்னெடுத்து இருக்கிறது.மேலும், இத்தகைய குற்றங்களை தடுக்க, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளை சீண்டினாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ அதிகபட்சமாக தூக்கு தண்டனை வரை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. தமிழகத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு, இயங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் எஸ்பி தலைமையின் கீழ் இப்பிரிவு சிறப்புடன் செயல்படுகிறது. இப்பிரிவில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், ஏட்டுகள் கிராமப்புறங்களுக்கு சென்று மக்கள் மத்தியில் போக்சோ சட்டப்பிரிவு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் ெதால்லைகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள், எங்காவது பாலியல் சீண்டலுக்கு ஆளானால் எவ்வித தயக்கமும் இன்றி அவர்களின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் சமூகத்தில் குற்றங்களை படிப்படியாக குறைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அரசு செயல்பட்டு வருகிறது. முன்பெல்லாம், பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை நேர்ந்தால், அப்பிரச்னை அதிகபட்சம் அவர்களின் பெற்றோரோடு நின்றுவிடும். ஆனால், தற்போது பெற்றோரும், பாதிக்கப்படும் குழந்தைகளும் துணிந்து புகார் கொடுத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கின்றனர். இத்தகையை விழிப்புணர்வை அரசும் பல்வேறு சமூக அமைப்புகளும் பம்பரமாய் சுழன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தவகையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பெண் குழந்தைகள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கோவை மேற்கு மண்டலத்தில் கோவை புறநகர், திருப்பூர் புறநகர், சேலம் புறநகர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்நிலையங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த காவல்நிலையங்களில் கடந்த 2018ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 350. 2019ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 452. 2020ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 515. அதே நேரத்தில் நடப்பாண்டில் (2021) ஜனவரி முதல் நவம்பர் வரை சேலத்தில் 135 வழக்குகளும், ஜனவரி முதல் அக்டோபர் வரை நாமக்கல்லில் 88 வழக்குகளும், தர்மபுரியில் 25 வழக்குகளும், கிருஷ்ணகிரியில் 40 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் 4 மாவட்டங்களில் மட்டும் இதுவரை 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சேலம் மாநகரில் 110 வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்தாண்டு (2020) 8மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகள் 515. ஆனால் நடப்பாண்டு 4மாவட்டங்களில் மட்டும் பத்துமாதங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 398. இதிலிருந்தே வழக்குள் பெருமளவில் அதிகரித்திருப்பது தெளிவாகிறது. அதோடு போலீசார் துரித கதியில் நடவடிக்கை எடுத்திருப்பதும் தெரியவருகிறது. வீட்டை சுற்றி இருப்போர், உறவினர்கள், பள்ளி செல்லும் இடத்தில் இருப்போரால்தான், இது போன்ற இன்னலுக்கு பெண் குழந்தைகள் ஆளாகின்றனனர். சில இடங்களில் மிகவும் நெருங்கிய உறவினர்களே இது போன்ற குரூரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. எனவே அரசும், தன்னார்வ அமைப்புகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணஓட்டம், ஒரு தனிஇயக்கமாக மாறவேண்டும். அப்போதுதான் ஆண்டுதோறும் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள் குறையும். இவ்வாறு சமூகஆர்வலர்கள் கூறினர்.

நடப்பாண்டில் 3,500 வழக்கு பதிவு

பெண் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் குற்றங்களை தடுக்க 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் வந்தால், உடனே போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் கடந்த 2019ம் ஆண்டு 2,396 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 1,742 வழக்கும், பாலியல் தொல்லை கொடுத்ததாக 654 வழக்கும் பதிவாகியுள்ளது.

2020ம் ஆண்டில் 3,090 போக்சோ வழக்குகள் பதிவானது. இதில், பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2,229 வழக்கும், பாலியல் தொல்லை கொடுத்ததாக 861 வழக்கும் பதிவாகியது.

நடப்பாண்டு (2021) தமிழக அளவில் இதுவரை சுமார் 3,500 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளது.

பாதுகாப்பு அல்ல...   பாதகச்செயல்

‘‘கிராமப்புறங்களில் பாலியல் சீண்டல்களில் இருந்து தங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் பூப்பெய்தியவுடன் (18வயதுக்கு முன்பே) திருமணம் செய்து வைக்கின்றனர்.நெருங்கிய உறவில் இதுபோன்ற பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொள்ளும் ஆண், அவர்களை விட 10வயதுக்கு மேல் அதிகம் உள்ளவராக இருக்கிறார். இது போன்ற குழந்தைகள் திருமணம் முடிந்த மறு ஆண்டே குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. பக்குவம் இல்லாத நிலையில், குடும்பத்திலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதுமட்டுமன்றி பெண் குழந்தைகளின் கல்வி, தனித்தன்மை, தன்னம்பிக்கை, எதிர்காலம் என்று அனைத்திற்கும் இது போன்ற திருமணங்கள் உலை வைத்து விடும். எனவே குழந்தை திருமணங்கள் என்பது பாதுகாப்பு அல்ல, பெரும் பாதகசெயல் என்பதை பெற்றோர் உணர வேண்டும் என்கின்றனர்,’’ மருத்துவர்கள்.

கர்ப்பிணியாக வந்த நிலையில் 50 வழக்குகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து படித்து வந்த சிறுமிகளை, திருமண வயது (18) எட்டுவதற்கு முன்பு விவரம் அறியா பெற்றோர் செய்து வைக்கும் திருமணத்தாலும், காதல் என்ற பெயரில் சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்யும் சம்பவங்களாலும் அதிகபடியான போக்சோ வழக்குகள் சமீபகாலமாக பதிவாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் கர்ப்பிணியாக வந்தால், உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில், 18 வயதுக்கு கீழ் கர்ப்பமுற்று பிரசவத்திற்காக வரும் சிறுமிகளை கண்டறிந்து, அவர்களிடம் விசாரணை நடத்தி போக்சோ வழக்குகளை போலீசார் பதிவு செய்கின்றனர். இவ்வகையில், சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு மட்டும் சுமார் 50 வழக்குகள் பதிவாகியிருக்கிறது. அதுவும் மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றெடுத்த பின், அவர்களை திருமணம் செய்த கணவன்மார்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது.

Related Stories: