திருவண்ணாமலை - வேலூர் சாலையில் செய்யாறு- கமண்டல நாகநதியின் குறுக்கே கூடுதல் மேம்பாலம் அமைக்க திட்டம்: தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை - வேலூர் சாலையில் கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கிலும், கமண்டல நாகநதியின் குறுக்கிலும் கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை - வேலூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. அதனால், விபத்துகளும் அதிகரித்துள்ளன. எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்தல், தரம் உயர்த்துதல், விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.இந்நிலையில், கலசபாக்கத்தில் செய்யாற்றின் குறுக்கே அமைந்துள்ள மேம்பாலத்துக்கு அருகே கூடுதலாக புதிய மேம்பாலமும், சந்தவாசல் அருகே கமண்டல நாகநதியின் குறுக்கே ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அருகே, கூடுதலாக புதிய மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. மேலும், திருவண்ணாமலை -வேலூர் நெடுஞ்சாலையில் போளூர் அருகே ஆரணி சாலை பிரியும் இடத்தில் அமைந்துள்ள எட்டிவாடி ரயில்வே கேட் பகுதியில், ரயில் பாதையின் குறுக்கே சாலை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளன. அதற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் என்.பாலமுருகன், செய்யாறு, கமண்டல நாகநதி ஆகிய இடங்களில் ஆறுகளின் குறுக்கே மேம்பாலம் அமைத்தல் மற்றும் எட்டிவாடி பகுதியில் ரயில்பாதையின் குறுக்கே சாலை மேம்பாலம் அமைத்தல் ஆகிய பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், திருவண்ணாமலை - வேலூர் சாலையில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள வாழியூர் சாலை சந்திப்பு, வசூர் சாலை சந்திப்பு, தென்பள்ளிப்பட்டு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை தீபம் நகரில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலம், புறவழிச்சாலையில் திண்டிவனம் சாலை சந்திப்பில் நடைபெறும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தார். அதோடு, வேட்டவலம் சாலையில் ஏந்தல் அருகே புதியதாக உயர்மட்ட மேம்பாலம் அமையும் இடத்தை பார்வையிட்டார்.

தொடர் மழையால் தேசிய நெடுஞ்சாலைகளில் மழை வெள்ளம் வழிந்தோடும் இடங்களை பர்வையிட்ட தலைமை பொறியாளர், அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சாலை சேதங்களை உடனடியாக சீரமைக்கவும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது, கண்காணிப்புப் பொறியாளர் (சென்னை) எம்.பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் கே.பழனிச்சாமி, கோட்டப் பொறியாளர்(தரக்கட்டுப்பாடு) பி.இளங்கோ, உதவிக் கோட்டப் பொறியாளர் ஜி.மஞ்சுளா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: