சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றம்: மாநகராட்சி தகவல்..!

சென்னை: சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரம் ஒரே மாதத்தில் 3வது முறையாக வெள்ளத்தில் சிக்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைவெள்ள நீர் புகுந்தது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர், செம்மஞ்சேரி, ஐயப்பன்தாங்கல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், பெருங்களத்தூர், துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைவெள்ள நீர் புகுந்தது.  இந்த பகுதிகள் நீர்நிலைகள் போன்று மாறி உள்ளது. தொடர்ந்து ஏரிகளின் உபரிநீர் வருவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியதாவது: சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், 51 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தண்ணீர் வெளியேற்றும் பணியில் 900 கனரக மோட்டார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதையில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: