காரைக்காலில் சிறிய மழைக்கே சகதியாக மாறிய வாரச்சந்தை: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

காரைக்கால்: காரைக்காலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடத்தப்படுவது வழக்கம். உள்ளூர் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இங்கு வந்து சந்தைப்படுத்துவார்கள். இதேபோல நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மற்றும் திண்டிவனம் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஒரேயிடத்தில் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும் என்பதாலும், குறைந்த விலைக்கு கிடைப்பதோடு, உள்ளூர் விவசாயிகளின் பசுமையான காய்கறிகள் கிடைக்குமென்பதாலும் காரைக்கால் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வார்கள். மீண்டும் பொருட்களை வாங்க அடுத்த ஞாயிறு வரும்வரை காத்திருப்பார்கள். இந்த வாரச்சந்தையால் நகராட்சிக்கும் வருவாய் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சிறிய மழை பெய்தாலே வாரச்சந்தை நடைபெறும் இடம் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வெண்டைக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய், வாழைக்காய் மற்றும் வாழைப்பூ உள்ளிட்ட பசுமையான காய்கறிகள் முதல் வெளியூர் வியாபாரிகளால் ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து கொண்டுவரப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் , பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளையும் சேற்றிலும், சகதியிலும் போட்டு விற்பனை செய்யவேண்டிய நிலை உள்ளது. காய்கறிகள் வாங்கச் செல்வோர் நடந்து செல்லமுடியாமல் சகதியிலே சறுக்கி விளையாடித்தான் காய்கறிகளை வாங்க வேண்டும். இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்கதையாக நீடித்து வரும் நிலையில் இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், பயனாளிகள், வியாபாரிகள் என பல தரப்பு மக்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதன் காரணமாக சிறிய மழை வந்தாலே சகதியாகிவிடுகிற சந்தை தற்போது பெய்த தொடர் கனமழை காரணமாக மேலும் சகதியாகி பயன்படுத்த முடியாதபடி உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More