சீர்காழி அருகே மீனவ கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 6 பேர் தாசில்தார் அலுவலகத்தில் தஞ்சம்: அதிகாரி உறுதியளித்ததால் சொந்த ஊர் சென்றனர்

சீர்காழி:சீர்காழி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 6 பேர் தாசில்தார் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமம் முத்தையா நகரில் வசிப்பவர் மணி- வசந்தா தம்பதியின் மகன் முருகேசன். இவரது மனைவி கிரிஜா, மகள்கள் சபர்னா, ஜெஸ்மிதா ஆகியோர் வசித்து வருகின்றன. இந்நிலையில் முருகேசன் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறார். இந்நிலத்தை அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்கள் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். இந்த செயலுக்கு மீனவ பஞ்சாயத்தார்களும் துணை போவதாக தெரிகிறது. முருகேசன் வயலில் சாகுபடி செய்ய விடாமல் உறவினர்கள் தடுத்து கொலை மிரட்டல் விடுவதாகவும் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் சீர்காழி காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நிலம் தொடர்பான பிரச்னையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி போலீசார் அனுப்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி மீனவ கிராமத்தில் ஊர் பஞ்சாயத்தார்கள் ஒன்றுகூடி முருகேசன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக தீர்மானம் போட்டு தண்டோரா மூலம் அறிவிப்பு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த முருகேசன் குடும்பத்தினர் மீன்பிடிக்க செல்லமுடியாமல் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முருகேசன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், சீர்காழி ஆர்டிஓ, தாசில்தார், டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார்.

முருகேசன் குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து 7 நாட்கள் கடந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் கிராமத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் முருகேசன் தனது தந்தை மணி, தாய் வசந்தா, மனைவி கிரிஜா, மகள்கள் சபர்னா, ஜெஸ்மிதா, ஆகியோருடன் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்துள்ளார். இதனை அறிந்த தாசில்தார் சண்முகம் முருகேசன் குடும்பத்தினரை அழைத்து விசாரித்து பின்பு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முருகேசன் குடும்பத்தினர் தொடுவாய் கிராமத்திற்கு சென்றனர். மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More