முஞ்சிறை வேளாண் அலுவலகத்தில் மழையில் நனைந்து நாசமான பொதுமக்களின் மனுக்கள்: வெயிலில் காயவைக்கும் அலுவலர்கள்

புதுக்கடை:  முஞ்சிறை வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில்  அலுவலக பைல்களும், பொதுமக்களின் விண்ணப்ப மனுக்களும் மழை வெள்ளத்தில் சேதமானதால், மனுக்களை அலுவலக பணியாளர்கள் உலர்த்தி வருகின்றனர்.  முஞ்சிறை  ஒன்றிய பகுதியில்  11 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான மக்கள் வாழை, தென்னை, மரச்சீனி, காய்கறி போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக வேளாண்மை விரிவாக்க அலுவலகம்  முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.குமரி மாவட்டத்தில் கனமழை பெய்தாலும்,  அணைகளில் உபரி தண்ணீர் திறந்து விட்டாலும்   முஞ்சிறை கிராம பகுதிகள் தண்ணீரில் மூழ்குவது வழக்கமாகும்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முஞ்சிறை ஒன்றிய அலுவலகம் தண்ணீரில் மூழ்கியது. இதில் வேளாண்மை விரிவாக்க அலுவலகமும் தப்பவில்லை.  வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் மேல் பகுதி கூரையில் விரிசல் ஏற்பட்டு  தண்ணீர் அலுவலகத்தின் உள்ளே ஒழுகும் நிலையில் உள்ளது.இதனால்  அலுவலகத்தின் உள்ளே இருந்த பைல்களும், பொதுமக்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்ப மனுக்களும் மழையில் நனைந்து உள்ளது.இதை  அலுவலகப் பணியாளர்கள் எடுத்து அலுவலக வளாகத்தில் வெளிப்பகுதியில்  வைத்து  உலர்த்தி வருகின்றனர். இதில் ஏராளம் மனுக்கள் தண்ணீரில் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  ஆகவே அரசு முஞ்சிறை வேளாண்மை விரிவாக்க அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக கம்ப்யூட்டர்களில் பதிவு செய்ய வேண்டும். என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: