அமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு!: சக மாணவர்கள் 3 பேர் பலி..ஆசிரியர் உள்பட 8 பேர் காயம்...அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்களை கொன்ற சம்பவத்தில் 15 வயது மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஐந்து நிமிட இடைவெளியில் சுமார் 20 முறை அவர் சுட்டத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இறந்தவர்கள் 16 வயது ஆண், 14 வயது பெண் மற்றும் 17 வயது பெண் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பள்ளியின் ஆசிரியர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆக்ஸ்போர்ட் உயர்நிலை பள்ளியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். போலீசார் பிடித்தபோது அந்த மாணவன் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனமும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்களும் தெரிவித்துள்ளார்.

Related Stories: