திருப்பதி கோவிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் மண் சரிவு..பாறை சரிந்து விழுந்ததால் 3 வளைவுகளில் சேதம்!!

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் இருந்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதை வழியே அனுமதிக்கப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதற்காக 2 மலைப் பாதைகள் உள்ளன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலை பாதையும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரவேண்டிய முதல் மலைப்பாதையும் உள்ளது. இதில் கோவிலுக்கு செல்லும் 2வது மலைப் பாதையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டு இருந்த நிலையில், முக்காளமிட்டு என்ற இடத்தில் இணைப்பு சாலை அருகே கனமழை காரணமாக திடீரென பாறை சரிந்து சாலையில் விழுந்தது.

அந்த வழியே சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் சத்தம் கேட்டு உடனடியாக பிரேக் போட்டு பின்னால் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாறை விழுந்ததில் 3 வளைவுகளில் உள்ள சாலைகள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 2வது மலைப்பாதையில் சுமார் 5 கிமீ- க்கு வாகனங்கள் ஆங்காங்கே காத்து கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலை சேதத்தை சீர் செய்வதற்கு 2வது மலைப் பாதையை தேவஸ்தானம் அதிகாரிகள் மூடியுள்ளனர். பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும்  பணியில் தேவஸ்தான பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காத்திருந்த வாகனங்களை இணைப்பு சாலை மூலம் முதலாவது பாதை வழியே திருமலைக்கு செல்ல  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More