வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!!

சென்னை: பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், பாடி, சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, போரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனமானது மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் மிகப்பெரிய கடைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் நகைக்கடைகளும், பர்னிச்சர் கடைகளும் உள்ளன. இந்நிலையில், வரி ஏய்ப்பு, கணக்கில் வராத முதலீடு உள்ளிட்ட  புகாரின் அடிப்படையில், இன்று காலை 8 மணி முதல் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், கிளை நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தப்பட்டில் சென்னை புரசைவாக்கத்தில் 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக போரூர், குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்களிலும் சோதனை நடைபெறுகிறது. இதன் காரணமாக கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. இந்த சோதனையின் முடிவில் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவரும்.

Related Stories: