வேலூரில் இருந்து திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் ரூ.2.27 கோடி பறிமுதல் வழக்கில் பெண் இன்ஜினியர் திடீர் கைது: விஜிலென்ஸ் போலீசார் நடவடிக்கை

வேலூர்: வேலூரில் இருந்து திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை பெண் செயற்பொறியாளரை, ரூ.2.27 கோடி பறிமுதல் செய்த வழக்கில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். வேலூரில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளராக இருந்தவர் ஷோபனா (57). இவர் தீபாவளி பண்டிகையொட்டி கான்ட்ராக்டர்களிடம் பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த மாதம் 2ம் தேதி இரவு தொரப்பாடி- அரியூர் சாலையில் ரெஸ்டாரெண்ட் அருகே ஷோபனா சென்ற அரசு காரை சோதனையிட்டு அதிலிருந்த ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 3ம் தேதி அதிகாலை பெரியார் அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஷோபனா தங்கிய வீட்டை விஜிலென்ஸ் போலீசார் சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.15.85 லட்சம் ரொக்கம், ரூ.3.92 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஷோபாவின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வீட்டில் கிருஷ்ணகிரி விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தி ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரொக்கம், 38 சவரன் நகைகள், 1 கிலோ 320 கிராம் வெள்ளி, ரூ.27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள டெபாசிட் பத்திரங்கள், 11 வங்கி கணக்கு புத்தகம், லாக்கர் சாவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரொக்கம் மட்டும் ரூ.2.27 கோடி பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி செயற்பொறியாளர் ஷோபனாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.27 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்களை வேலூர் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையில், லஞ்ச வழக்கில் சிக்கிய பொதுப்பணித்துறை பெண் செயற்பொறியாளர் ஷோபனாவை, திருச்சி வட்ட கட்டிடங்கள் பராமரிப்பு உதவி கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையில் ரூ.2.27 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வீட்டில் ஷோபனாவை வேலூர் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷோபனாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: