எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் கூட்டாளிகளின் 6 வங்கி லாக்கர்கள் திறப்பு: பலகோடி சொத்து ஆவணம் சிக்கியது

சேலம்: மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அசைக்க முடியாத நபராக திகழ்ந்து வந்தார். நிழல் முதல்வராக செயல்பட்டு வந்த இளங்கோவனுக்கு நாலாபுறமும் இருந்து பணம் கொட்டியது. மந்திரிகளால் முடியாத காரியத்தை கூட இளங்கோவன் செய்து முடித்து வந்தார்.

இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த ரகசிய தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 22ம் தேதி, அவரது வீடு, கூட்டாளிகள் உள்பட 36 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.34.28 லட்சம் ரொக்கம், ரூ.70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு, வெளிநாட்டு பணம் ரூ.5.5 லட்சம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது இளங்கோவனின் கூட்டாளிகளின் 6 வங்கி லாக்கரின் சாவியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர் தலைவராக இருக்கும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி, அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள லாக்கர், அம்மாப்பேட்டை, ஏத்தாப்பூர், பேர்லாண்ட்சில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் லாக்கர் என மொத்தம் 6  சாவியை மீட்டு சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் வங்கி லாக்கர் திறக்கப்பட்டது. இளங்கோவனின் கூட்டாளி ஒருவரின் சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி லாக்கரை திறந்தனர். அதில் கட்டுக்கட்டாக 30க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் சிக்கியது. இவை பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என கூறப்படுகிறது.

Related Stories: