நெல்லை, தூத்துக்குடியில் மழை நீடிப்பு தாமிரபரணியில் தொடர் வெள்ளம்: நீலகிரியில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் காரணமாக முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலை வெள்ளநீர் சூழ்ந்தது. நெல்லை மாநகர பகுதியில் குறுக்குத்துறை முருகன் கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவற்றை வெள்ளநீர் மூழ்கடித்தது. குறுக்குத்துறை முருகன் கோயிலில் கலசம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. மானூர் அருகேயுள்ள தெற்குப்பட்டியில் இரு தரைப்பாலங்கள் மூழ்கின. பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருப்பணிகரிசல்குளம் அருகே வாகைக்குளம் தரைப்பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்து சென்றது.ஏரல் பழைய தாம்போதி பாலமும் நேற்று மீண்டும் தண்ணீர் மூழ்கியது.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்த தண்ணீர்பந்தல் அருகே உள்ள வரண்டியவேல் தரைப்பாலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. நேற்று 6வது நாளாக வெள்ளம் கரைபுரண்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது. இதனால், மீண்டும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.  தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அடுத்துள்ள ஆதனூரைச் சேர்ந்த விவசாயி தளவாய்சாமி(50), நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கல்லாற்று ஓடையில் குளிக்க சென்றபோது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.

100 ஆண்டு மரம் விழுந்தது: நெல்லை டவுன் பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இங்குள்ள கோடீஸ்வரன் நகரில் 100 ஆண்டு பழமையான ஆலமரம் நேற்று அதிகாலை சரிந்து விழுந்தது. இதனால் டவுனில் இருந்து பேட்டைக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மரத்தை அறுத்து அகற்றும் பணி மும்முரமாக நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 5  மணி வரை கனமழை பெய்தது. கனமழையால் விருதுநகரில் லட்சுமி நகர், பெத்தனாட்சி  நகர், முத்தால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் 3 அடிக்கு குளம் போல்  தேங்கி நின்றது.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.

கனமழையால்  வடமலைக்குறிச்சி கண்மாய் நிறைந்தது. கண்மாயில் 3 ஷட்டர்கள்  திறக்கப்பட்டதால், விருதுநகர் கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  ஆற்றை ஓட்டிய பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. சுவர் இடிந்து  முதியவர் பலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து  வருகிறது. நேற்று காலை கனமழைக்கு ஆர்.எஸ்.மங்கலம் செம்பிலான்குடி  கிராமத்தில் வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்து மரியராஜ் (82) இறந்தார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில், ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் டிஎப்எல் பகுதியில் ராட்சத கற்பூர மரம் ஒன்று விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர். ஊட்டி நகரில் இருந்து ரோஸ்மவுண்ட் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ராட்சத மரம் விழுந்தது. இதனை தீயணைப்புறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை அகற்றினர். ஊட்டி அருகே மைனலை பகுதியில் மரம் ஒன்று மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால், இப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் லேசான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வெலிங்டன், அருவங்காடு இடையே மலை ரயில் பாதையில் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 30 பேர் கொண்ட ரயில்வே குழுவினர் மண்சரிவுகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரயில் இயக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்- தேவலாபுரம் இடையே உள்ள தரைப்பாலத்தில் நின்றிருந்தபோது, ஆற்றில் தவறி விழுந்து பழனி(49) பலியானார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சிஎஸ்எம் தெருவை சேர்ந்தவர் முத்து (55). பட்டு நெசவு தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவர், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் ஏரிக்கு சென்றார். அங்கு குடும்பத்தோடு குளித்தபோது முத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

Related Stories: