×

இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் கைதான மதுரை ஏட்டு சஸ்பெண்ட்

மதுரை: மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (45). இவர் கடந்த 27ம் தேதி, 25 வயதான இளம்பெண்ணுடன், மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில், இரவுக்காட்சி படம் பார்த்து விட்டு நள்ளிரவு டூவீலரில் அந்த பெண்ணுடன் அவனியாபுரம் திரும்பிக் கொண்டிருந்தார். நேதாஜி ரோட்டில் சென்றபோது ரோந்து பணியில் இருந்த, திலகர்திடல் காவல் நிலைய ஏட்டு முருகன் (41), மகேஷ்குமாரின் டூவீலரை நிறுத்தி, விசாரணை நடத்தியுள்ளார். பின்னர், அவரிடமிருந்த, ரூ.11 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டை பறித்துக் கொண்டு விரட்டி விட்டார்.

அவருடன் வந்த இளம்பெண்ணை தானே வீட்டில் கொண்டு விடுவதாக கூறி, டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி உள்ளார். சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மாலை மகேஷ்குமார், மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவிக்கமிஷனர் ரவீந்திரநாத் மற்றும் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து கடத்தல், பாலியல் பலாத்காரம், வழிப்பறி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிந்து ஏட்டு முருகனை கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், முருகனின் வீட்டிலிருந்து மகேஷ்குமாரிடமிருந்து பறித்த ரூ.11 ஆயிரம், அவரது ஏடிஎம் கார்டிலிருந்து எடுத்த ரூ.30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே ஏட்டு முருகனை சஸ்பெண்ட் செய்து, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார். கைதான முருகனுக்கு மனைவி, 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Madurai , Madurai Eight Suspended for abducting and raping a girl
× RELATED கடைகளுக்கு உள்ளே, வெளியே கண்காணிப்பு...