ஆந்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு 20 கிமீ அணி வகுத்த வாகனங்கள்

திருமலை: ஆந்திராவில் தொடர் கனமழையால் கூடூர் பாம்பலேறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 20 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெல்லூர் எஸ்பி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மேலும், விவசாய விளை நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது. மாவட்டத்தில் சராசரி மழையளவு 10.7 செ.மீட்டராக பதிவாகியுள்ளது. பொதலக்கூரு மண்டலத்தில் அதிகபட்சமாக 20.2 செ.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு முதல்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கூடூரில் உள்ள பாம்பலேறு ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், கூடூரில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  அப்பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விஜயவாடா- தமிழக தலைநகர் சென்னை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் 20 கிலோமீட்டருக்கு மேல் கார், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றை போலீசார் மாற்றுப் பாதை வழியாக அனுப்பி வருகின்றனர்.

Related Stories: