திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருமலை:  ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும்  கார்த்திகை மாதத்தையொட்டி, 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, நேற்று காலை இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, மஞ்சள் நிறத்திலான துணியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடி கொண்டு வரப்பட்டது. பின்னர், கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்தனர். யானை கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க கொடிமரத்தில் பிரமோற்சவ கொடியை ஏற்றினர். இதையடுத்து, கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

மாநில துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணி, பட்டு வத்திரங்களை தலையில் சுமந்து கொண்டு வந்தார். பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் கோயிலுக்குள்ளே எழுந்தருளினார். 2ம் நாளான இன்று காலை பெரிசேஷ வாகனம் மற்றும் இரவு அன்னவாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதைதொடர்ந்து, பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயிலுக்குளேயே அருள்பாலிக்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக 2வது ஆண்டாக இம்முறையும் பிரமோற்சவம் வீதியுலா ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பத்மாவதி தாயார் கோயிலில் மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், இணை செயல் அலுவலர் வீரபிரம்மன் மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: