இந்தியர்கள் திறமையால் லாபம் ஈட்டும் அமெரிக்கா: எலான் மஸ்க் கருத்து

வாஷிங்டன்: உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றிலும் இந்தியர்கள் உயர் பதவி வகிக்கின்றனர். கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெள்ளா என பல நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியர்கள் உள்ளனர். அந்த வரிசையில் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக மும்பையைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களில் மிக இளம் வயதில் சிஇஓ ஆனவர் என்ற பெருமையை பராக் பெற்றுள்ளார்.  இவருக்கு பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டிரைப் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாட்ரிக் கொல்லீசன் என்பவர் தனது டிவிட்டரில், ‘கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், ஐபிஎம், பாலோ ஆல்டோ நெட்ஒர்க்ஸ் வரிசையில் தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக மேலும் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, இடம் பெயர்ந்து வருவோருக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை அளிக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்,’ என கூறி உள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன தலைவரான எலான் மஸ்க், ‘இந்தியத் திறமையை பயன்படுத்தி அமெரிக்கா மிகப் பெரிய லாபம் ஈட்டுகிறது,’ என புகழ்ந்துள்ளார். சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டதும், அவரது பழைய டிவிட்களை பகிரும் நெட்டிசன்கள் பராக் வலதுசாரிகளுக்கு எதிரான கொள்கை கொண்டவர் என கூறி வருகின்றனர்.

Related Stories: