உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீதான பண மோசடி வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிஐ

புதுடெல்லி: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சிவனாண்டி மீதான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக போலீசார் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ தொடங்கியது. சென்னையில் சவுத் இண்டியா பாட்டிலிங் என்ற நிறுவனத்தை தொடங்குவதற்காக பணம் முதலீடு செய்தால் லாபத்தில் 25 சதவீத பங்கு தரப்படும் என்று பாண்டிராஜ் என்பவரை சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர் அணுகியுள்ளனர்.  இதையடுத்து தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ50 லட்சத்தை பாண்டிராஜ் அந்த கம்பெனி பெயரில் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், அவருக்கு சேரவேண்டிய பங்குத் தொகை கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவர் விசாரித்ததில் அவர் டெபாசிட் செய்ததற்கான எந்த ஆதாரமும் கம்பெனியில் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புகாரை வாபஸ் வாங்குமாறு அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தனக்கு நெருக்கடி தந்ததாகவும் பாண்டிராஜ் புகார் அளித்திருந்தார்.

வழக்கின் விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜரான பாண்டிராஜை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்ற போது, அவர்களிடம் இருந்து தப்பிய பாண்டிராஜ் தன்னை கடத்த முயன்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி 70க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அதே ஆண்டு விடுமுறை தினத்தன்று சென்னை உயர் நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி வீட்டை முற்றுக்கையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். அங்குள்ள பூந்தொட்டிகளையும் உடைத்தனர்.

இது சம்பந்தமாக சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மூன்று வழக்குகளையும் முதலாவதாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் பின்னர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றியமைத்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சென்னையில் சவுத் இண்டியா பாட்டிலிங் நிறுவனம் தொடங்க பாண்டிராஜ் என்பவரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக மனுதாரரான பாண்டியராஜை மிரட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சிவனாண்டிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க எந்தவித தடையும் கிடையாது.  

இதேப்போன்று ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 29ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சிவனாண்டி மீதான பண மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ தற்போது தொடங்கியுள்ளது. இதில் தமிழக போலீசார் முன்னதாக பதிவு செய்துள்ள இரண்டு எப்.ஐ.ஆரை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணையான நடைபெற உள்ளது. இதையடுத்து இதுதொடர்பான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் சிவனாண்டி மீது சிபிஐ சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்ளும் என தெரியவருகிறது.

Related Stories:

More