வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. லிட்டன் தாஸ் 114, முஷ்பிகுர் 91 ரன் விளாசினர். பாக். பந்துவீச்சில் ஹசன் அலி 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 286 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபித் அலி 133, அப்துல்லா ஷபிக் 52, பாஹீம் அஷ்ரப் 38 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

44 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், 56.2 ஓவரில் 157 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. தாஸ் 59, யாசிர் அலி 36 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஷாகீன் அப்ரிடி 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாக். 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ரன் எடுத்திருந்தது. அபித் அலி 56 ரன், அப்துல்லா ஷபிக் 53 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

அபித் அலி 91 ரன் (148 பந்து, 12 பவுண்டரி), அறிமுக வீரர் அப்துல்லா 73 ரன் (129 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் 58.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு  203 ரன் எடுத்து வென்றது. அசார் அலி  24,  கேப்டன் பாபர் ஆசம் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அபித் அலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் தாக்காவில்  டிச.4ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வங்கதேச அணியில் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், முகமது நயிம், டஸ்கின் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: