×

உலகின் சிறந்த கால்பந்து வீரர் 7வது முறையாக மெஸ்ஸிக்கு பலோன் டி’ஆர் விருது

பாரிஸ்: அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 7 வது முறையாக உலகின் சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் தங்கப்பந்து விருதை வென்றுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன்  லியோனல் மெஸ்ஸி (34). ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப் பார்சிலோனா அணிக்காக 2003-2021 வரை 552 ஆட்டங்களில் 485 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 158 சர்வதேச ஆட்டங்களில் 80 கோல் அடித்துள்ளார். தற்போது  பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக  விளையாடி வருகிறார். அதற்காக 2 ஆண்டுகளுக்கு இந்திய மதிப்பில் ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 2021 பலோன் டி’ஆர் தங்கப்பந்து விருதுக்காக   மெஸ்ஸி (அர்ஜென்டினா), ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி (போலந்து), ஜோர்கினோ (இத்தாலி), கரிம் பென்சிமா (பிரான்ஸ்), கோலோ கான்டே (பிரான்ஸ்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்),  முகமது சாலா (எகிப்து),  கெவின் பிரைன் (பெல்ஜியம்), கிளியன் எம்பாப்பே (பிரான்ஸ்), கியன்லுயிகி டொன்னாரும்மா (இத்தாலி) ஆகிய 10 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த வீரர்களிடையே கடுமையான போட்டி இருந்த நிலையில், பாரிசில் நடந்த விழாவில் மெஸ்ஸி 7வது முறையாக பலோன் டி’ஆர் விருதை தட்டிச் சென்றார்.

அவர் ஏற்கனவே 2009-2012, 2015, 2019ல் ஏற்கனவே இந்த விருதை பெற்றுள்ளார். 2021 சீசனில் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 28 கோல், பிஎஸ்ஜி அணிக்காக 4 மற்றும் அர்ஜென்டினா அணிக் காக 8 என மொத்தம் 40 கோல் அடித்துள்ளார். அவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி இந்த ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இருந்து 180 விளையாட்டு செய்தியாளர்கள் வாக்களித்து விருதுக்கான வீரரை தேர்வு செய்தனர். அதில் லெவண்டோவ்ஸ்கி, ஜோர்கினோ 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்த நிலையில், போர்ச்சுகல் நட்சத்திரம் ரொனால்டோ இம்முறை 6வது இடத்தையே பிடிக்க முடிந்தது. 2018 தவிர்த்து (லூகா மோர்டிச், குரோஷியா) 2008-2019 வரை மெஸ்ஸி அல்லது ரொனால்டோவே இந்த விருதை பெற்று வந்துள்ளனர். ரொனால்டோ இதுவரை 5 முறை பலோன் டி’ஆர் விருது வென்றுள்ளார்.

* சிறந்த வீராங்கனை அலெக்சியா
ஆடவர்களுக்கு வழங்குவது போல் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான தங்கப்பந்து விருதும் வழங்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்சியா புடெல்லாஸ் (24) தேர்வு செய்யப்பட்டார். இவர் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வருகிறார். பார்சிலோனா மகளிர் அணிக்காக 271 ஆட்டங்களில் விளையாடி117 கோல், ஸ்பெயின் அணிக்காக 92 சர்வதேச ஆட்டங்களில் 22 கோல் அடித்துள்ளார்.

Tags : Messi , Messi wins Balon d'Or for the 7th time
× RELATED 7,600 பேர் பயணிக்கும் 1,200 அடி நீள உலகின்...