×

மது அருந்தியதை தட்டி கேட்டதால் தகராறு கார்பென்டர், வெல்டருக்கு வெட்டு: 3 வாலிபர்களுக்கு வலை

ஆவடி: ஆவடி அருகே கடை முன்பு மது அருந்தியதை தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கார்பென்டர், வெல்டர் ஆகியோரை வெட்டி கொலை செய்ய முயன்ற 3 வாலிபர்களை, போலீசார் வலைவீசி தேடுகின்றனர். ஆவடி அடுத்த வெள்ளானூர், சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (40). கார்பென்டர் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பக்கத்தில் வெல்டிங் கடை உள்ளது. இதில் தியாகராஜன் (25) என்பவர் வேலை செய்கிறார். கடந்த 27ம் தேதி இரவு தியாகராஜன் வேலை முடிந்து கடை முன்பு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

அந்த நேரத்தில், அங்கு கட்டிட உரிமையாளர் கமல்சிங் என்பவரது மருமகன் மாதவரம், பேங்க் காலனி, 2வது தெருவைச் சேர்ந்த பிரதீப்குமார் (40) என்பவர் வந்தார். அப்போது அவர், தனது கடையின் முன்பு மது அருந்திய தியாகராஜன் மற்றும் நண்பர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதீப்குமார், தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு வந்தார். அவர்கள், தியாகராஜனிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், 3 பேரும் சேர்ந்து, அவரை கத்தியால் வெட்டினர்.

இதில், தியாகராஜனுக்கு, இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டதும், கார்பென்டர் சந்தோஷ்குமார், அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அவரையும் வெட்டினர். அவருக்கும் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனே பிரதீப்குமார், நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி சென்றறார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர், 2 பேரையும் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி ஆவடி டேங்க் பேக்டரி எஸ்ஐ விமலநாதன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரதீப்குமாரை வலைவீசி தேடி வருகிறார்.

Tags : Carpenter, welder cut for arguing over knocking over alcohol: Web for 3 teenagers
× RELATED கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை...