2ம் காலாண்டில் பே-டிஎம் வருவாய் 64 சதவீதம் அதிகரிப்பு: ரூ.1,090 கோடி ஈட்டியது

சென்னை: நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில், பே-டிஎம் நிறுவன இயக்க வருவாய் 64 சதவீதம் உயர்ந்து  ரூ.1,090 கோடி வருவாய் ஈட்டியது. இதில், யுபிஐ சாராத பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் 52 சதவீதம் உயர்ந்துள்ளது. நிதிச்சேவைகள் மற்றும் இதர வருவாய் வளர்ச்சி 3 மடங்கு அதிகரித்துள்ளது என பே-டிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் நிறுவனத்தின் பங்களிப்பு லாபம் 5.92 மடங்கு உயர்ந்து ரூ.260 கோடியாக உள்ளது.  

இதுபோல், வட்டி, வரிகள் உள்ளிட்டவை வருவாயில், 2ம் காலாண்டில் 39 சதவீதமாக, அதாவது ரூ.425.5 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு வருவாயில் 64 சதவீதமாக, அதாவது, ரூ.426.7 கோடியாக இருந்தது. தொழில்நுட்ப கட்டமைப்பில் முதலீடு மற்றும் வர்த்தகர்கள் இணைவது அதிகரிப்பு போன்றவையே இதற்கு காரணம். கொரோனாவுக்கு முந்தைய சேவைகள், வர்த்தகங்களில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் கவனம் செலுத்தப்பட்டது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மாதாந்திர சராசரி பயன்பாட்டாளர் விகிதம், 33 சதவீதம் உயர்ந்து 5.74 கோடி ஆகியுள்ளது. கடந்த அக்டோபரில் இது 35 சதவீத வளர்ச்சியுடன் சராசரி பயன்பாட்டாளர் எண்ணிக்கை 6.3 கோடியாக உள்ளது. கடன் வழங்கல் 7.14 மடங்கு உயர்ந்து, 28 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: