காஞ்சிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

காஞ்சிபுரம்: நேற்று முன்தினம் இரவு திடீரென வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். காஞ்சிபுரம் அடுத்த, கிளார் பகுதியில் இருந்து வேகவதி ஆறு,உற்பத்தி ஆகிகிறது. இந்த ஆறு, காஞ்சிபுரம் நகர் வழியாக சென்று அய்யம்பேட்டை, திருமுக்கூடல் பாலாற்றில் இணைகிறது. காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் பல இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கி விட்டது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ப்பரித்து சென்றது.

திடீர் வெள்ளத்தால், அருகில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென வெள்ளம் சூழ்ந்தது. இதையெடுத்து, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாயார் அம்மன் குளத்தையொட்டியுள்ள சாலையில் இருந்த தரைப்பாலத்தை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் வேகவதி ஆற்றில் வெள்ளம் வரக்கூடும் என அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும், அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. இந்தவேளையில், நேற்று முன்தினம் இரவு திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பெரும்பாலான வீடுகள் வெள்ள நீரில் சிக்கியது.

செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் வழியாக வந்தவாசி, செய்யாறு வேலூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் காஞ்சிபுரம் நகருக்கு உள்ளே வராமல் செல்ல ஓரிக்கை புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் பெரியார் நகரில் இருந்து மிலிட்டரி சாலை வழியாக செவிலிமேடு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  சின்ன ஐயங்குளம், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தினமும் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள மிலிட்டரி சாலை ஆதிசங்கரர் நகரில் சாலை கடும் சேதமடைந்துள்ளது. இதனால்  பைக்கில் செல்பவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சுமார் 2 அடி பள்ளத்தை திடீரென சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால் இப்பகுதி வழியாக பைக்கில் செல்வோர் அடிக்கடி விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் பெரியார் நகர், கன்னிகாபுரம், நசரத்பேட்டை, ஐயம்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. அனைத்து ஏரிகளும் நிரம்பியதால் ஒருசில இடங்களில் கரைகள் சிதலமடைந்து உடையும் அபாயத்தில் உள்ளது. ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பி உள்ளது. வாலாஜாபாத் அடுத்த தென்னேரி ஏரியில் தண்ணீர் நிரம்பி, உபரிநீர் திறந்து விடுவதால் பாலூர், ரெட்டிபாளையம், கரும்பாக்கம் வழியாக செங்கல்பட்டு அடுத்த நீஞ்சல்மடு அணை நிரம்பியது.

இதையொட்டி அதன் கரை உடைந்து, மகாலட்சுமி நகர், வைபவ நகரில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கரும்பாக்கம், ரெட்டிபாளையம் இடையே உள்ள தரைபாலத்தில் மழைநீர் செல்வதால், கடந்த 15 நாட்களாக சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காந்தலூர் பகுதியில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்து, இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் ஆபத்தான முறையில், வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்கின்றனர்.

மேலும் மெய்யூர், ஆலப்பாக்கம், வல்லம் அழகிய ஊராட்சி பவானி நகர், ராமகிருஷ்ணா நகர், வைபவ நகர், நியூ காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தொடர் மழையால் செங்கல்பட்டு நகராட்சி வேதாச்சலம் நகரில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ராமர் கோயில் மதில் சுவர் இடிந்து விழுந்தது. பாலாற்றில் கடந்த 10 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கத்தரி, வெண்டை, தக்காளி உள்பட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில்

16 முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு விவரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகள்    பரப்பளவு    கொள்ளளவு    இருப்பு

தாமல்    2307    18.00    18.00

தென்னேரி    5858    18.60    20.00

உத்திரமேரூர்    5636    20.00    20.00

பெரும்புதூர்    1423    17.60    17.60

பிள்ளைப்பாக்கம்    1096    13.20    13.20

மணிமங்கலம்    2079    18.60    18.60

செங்கல்பட்டு மாவட்ட ஏரிகள்

கொளவாய்    627    15.00    15.00

பாலூர்    2547    15.30    21.00

பொன்விளைந்த களத்தூர்    1224    15.00    15.00

காயார்    1178    15.07    15.07

மானாம்பதி    1091    14.11    14.11

கொண்டங்கி    1529    16.00    16.00

சிறுதாவூர்    1027    13.07    13.07

தையூர்    1879    13.09    13.09

மதுராந்தகம்    2853    23.30    25.10

பல்லவன்குளம்    2165    15.70    15.70

* ஆக்கிரமிப்பில் சிக்கிய ஆற்றங்கரை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வேகவதி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களை, பொதுப்பணித்துறையினர் கணக்கெடுத்தனர். அப்போது, 1400க்கு மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களுக்கு, மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கீழ்கதிர்பூர் கிராமத்தில் 17 ஏக்கர் இடம் தேர்வு செய்து, ரூ.150 கோடியில் 2,112 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிந்து, வீடுகளை ஒப்படைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள மற்ற குடியிருப்புகளுக்கும் செல்ல மறுப்பதால், மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வேகவதி ஆற்றை முழுவதுமாக மீட்டு மழை காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More