இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அதிகம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது தொழிலாளர் நலன் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உடனிருந்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 73 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் தனித்தனியே நடக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் அதிகளவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 1,600 சுகாதார ஆய்வாளர்களுக்கும் மதிப்பெண் வழங்கி, மக்களை தேடி மருத்துவத்தில், புதிதாக நியமனம் செய்ய இருக்கும் 2 ஆயிரத்து 600 சுகாதார ஆய்வாளர்களில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, இப்படி மனிதாபிமான அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் போது, அரசுக்கு எதிராக அவர்கள் செய்யும் போராட்டம் என்பது தேவையற்ற ஒன்றாகும். மினி கிளினிக் மூலம் எந்த வகையிலும் தமிழக மக்களுக்கு லாபம் இல்லை. எனவே தான் மினி கிளினிக்கில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களை எல்லாம் கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொண்டோம். தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு யாரும் வரவில்லை. அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More