ஒரே சமயத்தில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் செல்லும் வகையில் அடையாறு ஆற்றை ஆழப்படுத்தும் பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்: நீர்வளத்துறை உயரதிகாரி தகவல்.!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கும் அடையாறு, மணப்பாக்கம், நந்தம்பாக்கம், எம்ஜிஆர் நகர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக 42 கி.மீ தூரம் பயணித்து இறுதியாக பட்டினப்பாக்கம் அருகே முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. இந்த ஆறு கடந்த காலங்களில் 60 அடி வரை பரந்து விரிந்து காணப்பட்டது. ஆனால் நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியதன் காரணமாக அடையாறு  சுருங்கியது. குறிப்பாக, பல இடங்களில் 20 அடிக்கும் கீழ் குறுகியது.  இந்நிலையில் 2015ம் ஆண்டு  செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டதால், அடையாற்றில் ஒரே நேரத்தில் 60 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீரோட்டத்தை தாங்க முடியாமல் அடையாற்றில் தாம்பரம், கவுல்பஜார், பெருங்களத்தூர், திருநீர்மலை, மணப்பாக்கம், எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடையாற்றின் கரைகள் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், லட்சக்கணக்கானோர் உடமையை இழந்தனர். பலர் பலியாகினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அடையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், பல இடங்களில் 14 ஆயிரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து  அடையாறு ஆற்றையொட்டி ரூ.20 கோடியில் ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. அதேபோன்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.94 கோடியில் திருநீர்மலை முதல் அடையாறு முகத்துவாரம் வரை 25 கி.மீ நீளத்துக்கு தூர்வாரப்பட்டன. தொடர்ந்து இன்னும் ரூ.74 கோடியில் திருநீர்மலை முதல் ஆதனூர் வரை தூர்வாரும் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது கொட்டி தீர்த்த மழையில் பல ஏரிகள் நிரம்பியதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரைகள் அகலப்படுத்தப்படாத நிலையில் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேறியதால் தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடையாற்றின் வெள்ள நீர் புகுந்தது. இதை தொடர்ந்து, அடையாற்றை ஆய்வு செய்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா அடையாற்றை,  ஆழப்படுத்தவும், அகலப்படுத்துவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தற்போது, அடையாற்றில் கரை சுருங்கிய பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில்  ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கரைகள் ஒரே மாதிரியாக 60 அடி வரை இருக்கும் வகையில் அகலப்படுத்தப்படுகிறது. அடையாற்றை  எத்தனை அடி வரை ஆழப்படுத்தலாம் என்பது குறித்து தீர்மானிக்கப்படுகிறது. தற்போது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் நீர் மட்டம் குறைந்த பிறகு ஆழப்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே நேரத்தில் இந்த ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் வகையில் அடையாற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: