அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி.! ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி  ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளன.

தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல புகார் கொடுத்த விஜய் நல்லதம்பியும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுக்கள் மீது நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி. இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் பலராமன் என்பவர் மூலம்தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. விஜய் நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால், இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். புகார்தாரர்கள் தரப்பிலும் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐந்து பேரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related Stories:

More