நகர்ப்புறங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு.! பசுமை பயணத்தில் ஆர்வம் காட்டும் மக்கள்

சென்னை: சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தங்களது பங்களிப்பை கொடுக்கும் வகையில் பெரும்பாலான மக்கள் ‘இ-கம்யூட்’ முறையை நோக்கி செல்ல துவங்கி விட்டனர். இதன்படி அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் பலர் சைக்கிள், நடைபயணம் என பசுமைப்பயணத்தை பின்பற்றி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஒன்று, இரண்டு வாகனங்கள்தான் இருந்தன. ஆனால் காலநிலை மாற்றத்தின் காரணமாக இன்று அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் 27 கோடிக்கும் அதிகமான  வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தினந்தோறும் ஆர்டிஓ அலுவலகங்களில் புதிதாக  வாகனங்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இது ஒருபுறம் மோட்டார் வாகனத்துறைக்கு நன்மையை ஏற்படுத்திக் கொடுத்தாலும் மற்றொரு புறம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்தி வருகிறது.  இதனால் பெரும்பாலான நகரங்களில் காற்று மாசுபாடு அபாயகரமான நிலைக்கு சென்று விட்டது.

காற்றின் தரத்தை பொறுத்தவரை தர குறியீடு 50க்குள் இருந்தால் நல்லது. 50 முதல் 100க்குள் இருந்தால் திருப்திகரமானது. 101 முதல் 200க்குள் இருந்தால் மிதமானது. 201ல் இருந்து 300க்குள் இருந்தால் மோசமானது. 301ல் இருந்து 400க்குள் இருந்தால் மிக மோசமானது என்றும், 401ல் இருந்து 500க்குள் இருந்தால் கடுமையானது என்றும் அளவிடப்படுகிறது. அப்போது காற்றில் பி.எம்-2.5, பி.எம்-10 உள்ளிட்டவை எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வு செய்யப்படும். டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அங்கு பல்வேறு காரணங்களினால் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டியே இருந்து வருகிறது. நகர் முழுவதும் புகைமூட்டம் நிலவுகிறது. பகல் வேளைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உள்ளது.  தொடர் காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இதேபோல் சென்னை, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலும் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கிறது. இதைக்கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

மற்றொரு புறம் பொதுமக்களிடத்திலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பெரும்பாலான மக்கள் ‘இ-கம்யூட்’ முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த முறையின் நோக்கம் அலுவலகத்திற்கு பிரத்தியேக வாகனங்களில் வருவதை தவிர்த்து, பொது போக்குவரத்து, மின்சார சைக்கிள், மின்சார வாகனம், சைக்கிள், நடந்து வருவது போன்ற முறைகளை பின்பற்றுவதாகும். இதனை ஊழியர்கள் பலர் பின்பற்ற தொடங்கி விட்டனர். அலுவலகத்திற்கு மிக அருகில் வசிப்பவர்கள் நடந்து வருவதும், சைக்கிள் பயன்படுத்துவதையும் பின்பற்றி வருகின்றனர். மேலும் பலர் மின்சார ரயில், மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் சமீபத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியமும் காற்று மாசினை குறைக்கும் விதமாக மாசில்லா பசுமைப்பயணம் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்தது. சென்னை மாநகரின் காற்று மாசினை குறைக்கும் விதமாக சென்னையில் உள்ள உயர்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாசற்ற பசுமைப்பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி காற்று மாசினை குறைக்கும் விதமாக செயல்படும் சிறந்த உயர்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More