சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.9.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு: அதிகாரிகள் அதிரடி

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலைய கார்கோவில் கைப்பற்றப்பட்டரூ.9.4 கோடி போதைப்பொருட்களை தீயிட்டு அதிகாரிகள் அழித்தனர். சென்னை சர்வதேச விமான நிலையம், விமான நிலைய கார்கோ பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளிடம் இருந்தும், வெளிநாட்டிற்கு அனுப்ப வந்த பார்சல்களிலிருந்தும் சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தனித்தனி வழக்குகளில் 47 கிலோ கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.9.4 கோடி. இந்த போதைப்பொருட்களை லெதர் ஜாக்கெட்களில் மறைத்து வைத்து சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சில பயணிகளிடமிருந்தும், மருத்துவப் பொருட்கள் என்ற பெயரில் பார்சல்களில் கார்கோ விமானங்களில் கடத்த முயன்றதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதை நீதிமன்ற உத்தரவின்பேரில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் முடிவடைந்ததையடுத்து, போதைப் பொருட்களை அழிக்க சுங்கம், டிஆர்ஐ, மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி செங்கல்பட்டு அருகே உள்ள பயோமெடிக்கல் கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலைக்கு நேற்று எடுத்து வந்த அதிகாரிகள், போதைப்பொருட்களை தீயில் போட்டு எரித்து சாம்பலாக்கினர். போதைப்பொருட்கள் அழிப்பு குறித்து அதிகாரிகள், கொடுத்த தகவலில் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார், எந்த நாடுகளுக்கு கடத்தினர், எந்த ஆண்டில் கடத்தி பிடிபட்டது, எத்தனை பேரை கைது செய்தனர், நீதிமன்றத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் ஆசாமிகளுக்கு தண்டனை கிடைத்ததா, என்ன தண்டனை என்ற எந்த விவரங்களும் சுங்கத்துறை அனுப்பிய செய்திக்குறிப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More