×

ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி; கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்..! மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசோதனைகள் மூலமாகவே ஒமிக்ரான் வைரஸ் பரவலை ஆரம்பகட்டத்திலயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி 15 நாடுகளில் இந்த வைரஸ் பரவி விட்டது. இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என ஒன்றிய அரசு கூறி உள்ளது. அதே சமயம், ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, குறிப்பாக ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா சூழல் மற்றும் புதிய வகை வைரசை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளிநாட்டு பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுகம் சர்வதேச விமானநிலையங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென ராஜேஷ் பூஷண் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலை மார்க்கமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் வீரியமிக்கதாக இருந்தாலும், ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளில் இருந்து தப்ப முடியாது என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறி உள்ளார். எனவே, நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசு தரப்பில் மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மூலம் ஆரம்ப கட்டத்திலேயே ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டு பயணிகளிடம் தவறாமல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும், கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வருபவர்களின் மாதிரிகளை உடனடியாக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்து, வைரசின் மரபணு வகையை கண்டறிய வேண்டும். அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல, கொரோனா பாசிட்டிவ் உள்ள வெளிநாட்டு பயணிகள் வீட்டு தனிமையில் இருக்கிறார்களா என்பதையும் கண்டிப்பாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழலை எதிர்கொள்ள போதுமான மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதே போல, மாநிலங்களின் தினசரி கொரோனா பாதிப்பையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறி உள்ளார். ஒமிக்ரான் வகை வைரஸ் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக மட்டுமே பரவக் கூடிய வாய்ப்புள்ளது. இதனால், பல நாடுகளும், பாதிக்கப்பட்ட நாடுகளுடனான விமான சேவையை துண்டித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு எந்த நாட்டிற்கும் பயண தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Union Government , Echo of the Omigron threat; Corona testing should be intensified ..! Union Government Order to States
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...