பெண்ணை கடத்தி பலாத்காரம்: ஏட்டு கைது

மதுரை: மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் பிளாஸ்டிக் பைப்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர், கடந்த 27ம் தேதி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இளம்பெண், 2 ஆண் ஊழியர்களுடன், மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்றார். முதல் காட்சி பார்த்து விட்டு, 4 பேரும் பெரியார் பஸ் நிலையம் வந்தனர். உடன் வந்தவர்களை பஸ்சில் அனுப்பிவிட்டு, மகேஷ்குமார் தனது டூவீலரில் இளம்பெண்ணுடன் அவனியாபுரம் சென்றதாக கூறப்படுகிறது.

மதுரை நேதாஜி ரோட்டில் சென்றபோது, இரவு ரோந்து பணியில் இருந்த ஏட்டு முருகன், மகேஷ்குமாரின் டூவீலரை நிறுத்தி விசாரணை நடத்தினார். பின்னர் மகேஷ்குமாரை மிரட்டி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை வாங்கி, அதற்கான ரகசிய எண்ணையும் ஏட்டு முருகன் வாங்கி உள்ளார். அதிலிருந்த பணத்தையும் முருகன் எடுத்துள்ளார். இளம்பெண்ணை தானே வீட்டில் விடுவதாக கூறி, தனது டூவீலரில் அழைத்துச் சென்றுள்ளார். பின் அந்தப்பெண்ணை மறைவான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்து, காலையில் ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து அந்தப்ெபண், மகேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் தரப்பில், மகேஷ்குமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திலகர்திடல் குற்றப்பிரிவில் ஏட்டாக பணியாற்றும் முருகன், கடத்தப்பட்ட இளம்பெண் மற்றும் மகேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், நடந்த சம்பவம் உண்மை என தெரிந்தது. இதைத்தொடர்ந்து முருகன் மீது நேற்றிரவு வழக்குப்பதிவு செய்த தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், அவரை கைது செய்தனர்.மதுரையில் போலீஸ்காரர் ஒருவரே, இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More